சனி, 11 நவம்பர், 2017

தலைப்பில்லாக் கவிதைகள். கவிதை 19.

சில மனிதர்கள் சிங்கங்களை
தன் அருகில் வைத்து கொள்ள
விரும்புகிறார்கள்
இரத்த ருசிக்காக தன்னை
குதறும் என்று அறியாமல்
சிலர் பாம்புகளை தன் அருகில்
வைத்துக் கொள்கிறார்கள்
அதன் படமெடுத்து
ஆடும் அழகுக்காக
அதன் விசத்தை அகற்ற என்றேனும்
மறந்து விடலாம் என்பதறியாமல்
சிலர் மான்களை அருகில்
வைத்துக் கொள்கிறார்கள்
அதன் கொம்பின் வலுவிற்காக
அது சிங்கத்தின் மாமிசம்
என்றறியாமல்
சிலர் கிளிகளை கூண்டில் அடைத்து
வைத்துக் கொள்கிறார்கள்
அது இரவு முழுவதும் கீறீச்சிட்டு
தன்னை தொல்லை தரும்
என்றறிந்தும்
பலர் தன்னை தானே கூண்டில்
அடைத்து கொள்கிறார்கள்
அதுவே பாதுகாப்பானது என்று
அவர்கள் எண்ணக் கூடும்
அப்படி இல்லையெனினும்.






சனி, 24 ஜூன், 2017

தலைப்பில்லாக் கவிதைகள். கவிதை 18.

அதிகாலை சூரியன்
மிதிவண்டி
பாதையை இருட்டாக்கும் மரங்கள்
படர்ந்து தலை தொடும் கொடிகள்
வளர்ந்து முறைத்து நிற்கும் செடிகள்
பூக்கள்
பயந்து விலகும் பாம்பொன்று
படபடக்கும்  பறவைகளின் ஓசை
சலசலக்கும் ஓடை
ஒன்றையடி பாதை
கடந்து செல்லும் மஞ்சள் அழகி
அழகாகும் விடுமுறை .


ஞாயிறு, 11 ஜூன், 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை.17.

அவள் அவளிடத்தில்
நின்று கொண்டிருந்தாள்
நான் சென்று இணைத்துக் கொண்டேன்
என் வாழ்வை அவளுடன்
ஒன்றைாயொன்று நேரெதிராக
இரட்டை கோடுகளாக உணர்ந்தேன்
தள்ளி வந்து
தன் இசையை கேட்டேன்
தன் நடனத்தை ஆடினேன்
தனக்கான புத்தகங்களை
தேடித் திரிந்தேன்
எனக்கான பயணத்தை பயணித்தேன்
தள்ளி நிற்பது அப்படியொன்றும்
எளிமையாகவும் சுலபமாகவும்
இருக்கவில்லை
அவளை நோக்கி நகர்ந்தேன்
அவள் அவளிடத்தில் தான்
நின்று கொண்டிருந்தாள்
எங்கேயும் நகராமல்.

சனி, 10 ஜூன், 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை. 16.

சில கால்கள் அருவருப்பானவை
அவை நம் உடலை கூச செய்பவை
தொட்டுக் கும்பிட்டே ஆக வேண்டிய
கால்கள் காலாச்சார நிழலை
போர்த்தி கொண்டிருப்பவை
எத்தனை உயரத்தில் கால்கள்
இருந்தாலும் தொட்டு விட
துடிக்கும் மனிதர்கள் உண்டு
தொடவே முடியாத கால்கள் உண்டு
நீங்கள் எத்தனை முறை விழுந்து
கும்பிட்டாலும்
சூட்டையும் சேற்றையும்
பொருட்படுத்தாத கால்களை
எவரும் பொருட்டாக கொள்வதில்லை
கால்களுக்கான மரியாதை
அவரவர் தேவைகளுக்கான
வெளிச்சத்தில் தஞ்சம் அடைகிறது
பிண்ணி பிணைந்திருக்கும் கால்கள்
பரவசம் தரக்கூடியவை
உங்கள் முகத்தில் உரசி கொள்ளும்
கால்கள் பரிசுத்தமானவை
விழிக்கும் போது உங்கள்
முகத்தில் கிடந்தாலும்
அவை வளராதவரை .


ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை 15.

மலைவாழ் அம்மன்
நாலரை மணிக்கு எழுந்து
நாலு மலை தாண்டி
நாலு மணி நேரம் இலை பறித்தால்
அறுபது பறிப்பு கூலி என்றது
ஆதி தமிழ் அம்மன்
ஒரு நாளு முழுக்க கல்லு சுமந்து
கூரை ஏற்றினால்
நூற்றைம்பது என்றது
வேடர் அம்மன்
மதியம் ஆற்றில் இறங்கி
சாயநேர வரை சேறு தடவி
இராலு பிடித்தால்
அம்பது நூறு கிடைக்கும் என்றது
தோப்பு அம்மன்
ஊற வைத்த வோலையை
நாள் முழுக்க வேய்ந்தால்
நாற்பது என்றது
மீனவ அம்மன்
கூடை மீன் சுமந்து
நாலு ஊரும் நாற்பது தெருவும் கூவினால்
நூறோ நூற்றைம்பதோ
வரும்படி என்றது.
ஏல அம்மன்
அம்பது , எம்பது , நூறு
நூத்தம்பது , இரநூறு
நாலு மணிக்கணக்கா
ஏலம் கூவினா இரநூறு
கூவு கூலி என்றது
வேளான் அம்மன்
ஆறு மணிக்கு சேத்துல இறங்கி
ஆறு மணி நேர நாட்டு நட்டா
நூற்றைம்பது நடவு கூலி என்றது
தன் தலைமுறை ஒளிர்வுக்காக
ஓடாய் தேய்ந்த
அம்மன்களை
நாலு கூடை மண் அள்ளி
நாலு மணி உக்கார்ந்திருந்தா
உனக்கு என்பது எனக்கு இருவது
கூட்டு சேர்த்தது
கையூட்டு
ஆட்சியதிகார
அதிகாரவர்க்கம்.






சனி, 22 ஏப்ரல், 2017

தலைப்பில்லா கவிதைகள்.

ஒரு கோட்டின் மீது
பயணித்து கொண்டு இருக்கிறது
விழித்திருக்கும் மனம்
முடிவில்லா கோடாய்...
நிற்கும் போதும்
நடக்கும் போதும்
ஒவ்வொரு அசைவின் போதும்
என்னை விட்டு
முன்போ பின்போ
வலதோ  இடதோ
இறந்தக்காலத்திலோ
எதிர்க்காலத்திலோ
நின்று கொண்டிருக்கிறது....
எப்போதும் என்னுடன்
இருப்பதும் இல்லை
இருக்கப்போவதும் இல்லை.

சனி, 15 ஏப்ரல், 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை 14.

நான் எப்பொழுதும்
பேருந்து காத்திருப்புக்காக
அமரும் சிமெண்ட் தரையில்
எறும்பு கூட்டம் ஒன்று
அதை என் விரலை குவித்து
தட்டி விட்டேன் புல்தரையில்
இப்போது தான் பார்க்கிறேன்
வெண்மையான உணவு உருண்டை
அந்த தரையில் கிடைப்பதை
வேறொரு இடத்தில் அமர்ந்தேன்
அதை தட்டி விடாமல்
அந்த கூட்டம் அதை தேடி
வரும் என்ற நம்பிக்கையுடன் .

வியாழன், 6 ஏப்ரல், 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை 13.

நான்கு கால்களுடைய
மிருகமாக படைக்கப்பட்டது
முதுகெலும்பை நேராக்கி
முன்னங்கால்களை கைகளாக்கி
பரிணாமம் கண்டது.
கைகள் கிடைக்கப் பெற்றதும்
தான் வாழ்ந்த காட்டை
அழித்து ருசித்து நகர்ந்தது
பதுங்கி கிடந்த மலைகளை
அழித்து பாதுகாப்பை தேடியது
பூவுலகை பிளந்தெரித்து
இருளை வெளிச்சமாக்கியும்
வெம்மையை குளிராக்கியும்
அறிவுதிறனால் அனுபவித்தது
பூமியை துளையிட்டு
நகர்ந்து பறந்து பேரின்பம் கொண்டது
இறுதியில்
தனக்காக படைக்கப்பட்டதை
வெப்பக்கிரகத்திடம்
பரிசளித்துவிட்டு
பரிதவிக்கிறது.

சனி, 4 மார்ச், 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை.12.

பால்ய கால பருவத்தில்
எனக்கு கிடைக்க பெறும்
பணத்தாள்கள்
ஒரு நாள் மீனின்
கவிச்சியும்
மற்றொரு நாள் இராலின்
வீச்சத்தையும்
இன்னொரு நாள் நண்டின்
நாற்றத்தையும்
பிறகொரு நாள் கருவாட்டின்
மணத்தையும்
தன்னகத்தே கொண்டிருக்கும்.
எந்த வீச்சமானாலும்
நான் அதை மறுதலிப்பதில்லை.
ஏனெனில்
அது.....
தெய்வத்தின்
உடம்பு
சுருக்குப்பை
புடவைமுடிச்சு
இன்னபிற.....


சனி, 21 ஜனவரி, 2017

தலைபில்லா கவிதைகள் . கவிதை .11 .

மனிதர்கள் பாலைவனத்தை
கண்டடைந்த பிறகு
இலை பரப்பி மரத்தின் நிழலை
நாடுகிறார்கள்...

ஒவ்வொரு கணமும்
நிழல் நகர்வை
பின் தொடர்கிறார்கள்...

வெப்பக்காற்றை விரும்பி
ஏற்கிறார்கள்
சில்லென வீசும் தென்றலை
அனுபவிக்கிறார்கள்.....

முடிவில் இருளை
சென்றடைகிறார்கள் .



வியாழன், 19 ஜனவரி, 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை.10.

எங்கள் விடுமுறைகால
பகல் வீடாய் இருந்த ஆலமரம்
வெட்டி வீழ்த்தப்ட்டபோது
கிளையை குழந்தைகளுக்காக
நட்டு வைத்தோம் ......

கிளை மரத்தின் கீழ்
குழுந்தைதைகள் காண கிடைப்பதில்லை
அதன் விழுதும் கிளையும்   குழந்தைகளுக்காக
ஏங்கி கிடக்கின்றன.....

ஊர் செல்லும் போது
எப்பொழுதும் பார்க்கிறேன்
கிளை மரத்தின்
வெறுமையை ஏக்கத்தை ....

ஒரு முறையேனும் நானாவது
அதன் விழுது பிடித்து
ஊஞ்சலாடி விட வேண்டும்
யாரும் பார்க்காத நேரத்தில் .......


ஞாயிறு, 15 ஜனவரி, 2017

கருகும் உணவு.

எங்கள் பயிர்களுக்கு
ரசாயணம்
உணவாய் விற்கப்படுகிறது
எங்களுக்கும் புழுக்களுக்கும்
ரசாயனம்
உயிர்கொல்லியாய் விற்கப்படுகிறது.
தண்ணீரை காசாக்க
துணை போகும் ஆளுமைகள்
எங்கள் செந்நீர் உறைவதை
ஊதாசினப்படுத்துகின்றன.
பெய்யும் நீர் எல்லாம்
கடலில் கலக்க
கண்ணீர் பெருநீராய்
விளைநிலங்களை நனைக்கிறது
எங்கள் உயிர் மட்டும்
தரிசின் பிளவுகளை பிரியாமல்
காற்றினில் அலைகிறது.

செவ்வாய், 10 ஜனவரி, 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை.9.

தொலைதூரத்தில்
சிரிப்பலைகள்
அழுகுரல்கள்
ஓயாத பேச்சுகள்
கார் கிரிச்சிடும் சத்தங்கள்
அரசியல்வாவாதியின்
ஆரவாரங்கள்
சாமியார்களின்
உபதேசங்கள்
களியாட்டங்கள்
பணத்தாள் உதிர்ந்து விழும் சத்தம்
நெருங்கியும் செல்கிறேன்
விலகியும் நிற்கிறேன்.